இந்தச் சுவிசேஷம் உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும். (மத் 26:13)
இராச கிளாரிந்தா அம்மையார் சிறுவயதில் கோகிலா என்று அழைக்கப்பட்டார்; அவர் ஒரு பிராமண குலத்தைச் சேர்ந்த பெண். 1770-ல் தஞ்சாவூரில் மராத்திய ஆட்சி நடந்துகொண்டிருந்தது. துளசாஜி என்ற ராஜா தஞ்சையை ஆண்டுகொண்டிருந்தபோது, மன்னரின் அரண்மனையில் அதிகாரியாக இருந்த மராத்தியர் ஒருவருக்கு கோகிலா திருமணம் செய்துகொடுக்கப்பட்டார்; ஆனால், ஒரு சில ஆண்டுகளில் கோகிலாவின் கணவரோ அகால மரணமடைந்தார்; கோகிலா இளம் விதவையானாள். அக்காலத்தில், கணவன் இறந்துவிட்டால் மனைவியையும் உயிரோடு எரிக்கும் 'உடன்கட்டை' ஏறும் வழக்கம் தஞ்சாவூர் அரச பரம்பரையில் இருந்தது. அதன்படி, கோகிலாவையும் புது மணப்பெண் போல் அலங்காரம் செய்து, சுடுகாட்டிற்கு அழைத்துக்கொண்டுவந்தனர்; சிதையில் ஏற்றித் தீயை ட்டினார்கள். அப்போது எதிர்பாராத ஓர் நிகழ்ச்சி நடந்தது.
தற்செயலாக அங்கு வந்த தஞ்சாவூரில் இருந்த ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி படையின் அதிகாரியான ஹென்றி லிட்டில்டன் (Henry Lyttleton) என்பவர் இந்தக் காட்சியைக் கண்டு அதிர்ந்துபோனார். மனிதாபிமானத்துடன் கோகிலாவை சிதையிலிருந்து தூக்கிச் சென்று காப்பாற்றினார். இதைக் கண்ட பிராமணர்கள் கொதித்து எழுந்தனர். சிதையிலிலிருந்து காப்பாற்றப்பட்ட கோகிலாவை வைதீகப் பிராமண சமுதாயம் புறக்கணித்தது; அந்த சமுதாயத்தில் அவளுக்கு இடமில்லாமலும் போனது.
ஆதரவற்று நின்ற கோகிலாவுக்கு அவளைக் காப்பாற்றிய ஆங்கிலேய அதிகாரி ஆதரவு அளித்தார் அத்துடன், கோகிலாவை மனைவியாகவும் ஏற்றுக்கொண்டார். தஞ்சாவூர் மக்கள் நகைத்தனர்; திருச்சியிலிருந்து அடிக்கடி தஞ்சாவூருக்கு மன்னரைக் காணவந்த ஜெர்மன் பாதிரியாரான சுவாட்ஸ் ஐயரின் காதில் இச்செய்தி விழுந்தது. ஆங்கிலப் படைவீரர்கள் இந்தியப் பெண்களைச் சேர்த்துக்கொண்டு வாழ்வது கிறிஸ்தவம் இந்தியாவில் பரவுவதற்கு மிகுந்த தடையாக இருக்கிறது என்ற கருத்து அப்போது நிலவியது. ஆனால், ஆங்கிலப் படைத் தளபதி லிட்டில்டன் மற்ற படைவீரர்களைப் போன்றவர் அல்ல, புகலிடம் அற்ற கோகிலாவை ஆதரித்து, ஆங்கில மொழியையும், வேதத்தின் சத்தியங்களையும், திருச்பையின் முக்கிய கோட்பாடுகளையும் கற்றுக்கொடுத்தார். லிட்டில்டன் கொடும் நோயால் பாதிக்கப்பட்டபோது, கோகிலா மிகுந்த அக்கறையுடனும், அன்புடனும், அவருக்குப் பணிசெய்தார். லிட்டில்டன் தனது சொத்து முழுவதையும் கோகிலாவுக்கே எழுதிக்கொடுத்தார். லிட்டில்டன் போதனையின் மூலம் இயேசுவை அறிந்துகொண்ட கோகிலா, சுவாட்ஸ் ஐயரைச் சந்தித்து ஞானஸ்நானம் பெற விரும்பினாள். எனினும், அவள் ஒரு ஆங்கிலப்படை அதிகாரியிடம் இருப்பதால் அவளுக்குத் திருமுழுக்குத் தர சுவாட்சு ஐயர் தாமதித்தார்.
தஞ்சாவூரிலிருந்து லிட்டில்டன் - கோகிலா தம்பதியினர் பாளையம்கோட்டைக்கு குடிபெயர்ந்தனர். திருநெல்வேலிக்கு வந்த சில காலத்தில் லிட்டில்டன் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார். தன்னந் தனியாக விடப்பட்ட கோகிலா வேத சத்தியங்களை கற்றறிந்து இறைப்பணிக்கும் மக்கள் பணிக்கும் தன்னை அர்ப்பணித்தார். லிட்டில்டன் மரணத்திற்குப் பின்னர் கோகிலா பாளையங்கோட்டையிலேயே தங்கியிருந்தார். சில வருடங்களுக்குப் பின்னர் ஆங்கிலப் படை அதிகாரி ஒருவரின் திருமணத்தை நடத்தித் தர பாளையங்கோட்டை வந்த சுவாட்ஸ் ஐயர் கோகிலாவையும் அவரது செயல்களையும் குறித்து கேள்விப்பட்டார். கோகிலாவின் வாழ்க்கையை நினைத்து மனமகிழ்ந்தார். 1778-ம் ஆண்டு மார்ச் 4 அன்று கோகிலா கேட்டுக்கொண்டபடியே 'கிளாரிந்தா' என்ற பெயர் சூட்டி ஞானஸ்நானம் அளித்தார். இந்தப் பெயரை லிட்டில்டன் கோகிலாவுக்குக் கொடுத்திருக்கவேண்டும் என நம்பப்படுகிறது. சுற்றுவட்டத்தில் உள்ள ஜனங்களுக்கு நற்செய்தி அறிவித்து அவர்களை திருச்சபையில் சேர்த்தார் கிளாரிந்தா. இதனைக் கண்ட சுவாட்ஸ் ஐயர், பாளையங்கோட்டையில் வளர்ந்துகொண்டிருந்த சிறிய திருச்சபையினை 1778-ம் ஆண்டு கிளாரிந்தாவிடம் விட்டுச் சென்றார்.
கிளாரிந்தா அம்மையார் கல்வி அறிவும், சிறந்த மதிநுட்பமும் உடையவர். சிறு வயதிலேயே சமஸ்திருத புலமை பெற்றிருந்தவர்; அவரது தாய்மொழி மராத்தி. தனது கணவர் லிட்டில்டன் மூலம் ஆங்கில மொழியையும், வேதாகம அறிவையும் பெற்றுக்கொண்டார். தஞ்சாவூரில் இவர் வசித்துவந்த நாட்களில், சுவாட்ஸ் ஐயர் மூலமாக வேத போதனைகளையும் பெற்றார்; இறைத் தொண்டுடன் சமுதாயத் தொண்டினையும் செய்ய இவர் ஆர்வம் கொண்டிருந்தார்.
அவரது காலத்தில் கீழ்சாதியினருக்குக் கல்வி பெறும் வாய்ப்பு இல்லாதிருந்தது. எனவே, தனது வீட்டில் ராயப்பப்பிள்ளை என்பவரது உதவியுடன் திண்ணைப் பள்ளிக்கூடம் ஒன்றினை அமைத்து, சொந்த செலவிலேயே ஆசிரியரை நியமித்து சிறுவர்களுக்கு கல்வியறிவினைக் கொடுத்தார். இப்பள்ளியே பின்நாட்களில் தூய யோவான் கல்லூரியாக வளர்ந்ததாக பலர் நம்புகின்றனர். மேலும், தேரிவினை என்ற ஊரிலும் இலவச பாடசாலை ஒன்றை நிறுவினார். தன்னைச் சார்ந்தவர்களை கல்வி அறிவு உடையவர்களாக்குவதில் மிகவும் கவனமுடையவராக இருந்தார் கிளாரிந்தா.
பாளையங்கோட்டையில் கிளாரிந்தாவின் பொறுப்பில் இருந்த சிறிய திருச்சபை வேகமாக வளர்ந்தது. இரண்டு ஆண்டுகளில் திருச்சபையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 40- ஆக உயர்ந்தது. பாளையங்கோட்டையில் உள்ள சின்னஞ் சிறு சபைக்கு தனது சொந்த செலவிலேயே ஒரு ஆலயத்தைக் கட்டியெழுப்பினார். திருநெல்வேலியில் கட்டப்பட்ட முதல் சீர்திருத்த கிறிஸ்தவ ஆலயம் கிளாரிந்த அம்மையார் தோற்றுவித்த ஆலயமே. 1783-ம் ஆண்டு இவ்வாலத்தைக் கட்டத்தொடங்கி 1785-ம் ஆண்டில் கட்டி முடித்தார். 24 ஆகஸ்டு 1785-ல் சுவாட்ஸ் ஐயர் பாளையங்கோட்டைக்கு வந்து ஆலயத்தை பிரதிஷ்டை செய்தார். அப்போது நடந்த திருவிருந்தில் 80 பேர் பங்கேற்றனர். கிளாரிந்தா அம்மையாரின் திருப்பணிகளை சுவாட்ஸ் ஐயர் வெகுவாகப் பாராட்டினார். இந்த ஆலயம் கிளாரிந்தா ஆலயம் என்றே இன்றும் அழைக்கப்படுகின்றது. கிளாரிந்தா அம்மையாரின் காலத்தில் ஐரோப்பியரும் இந்தியரும் ஒன்றாக இந்த ஆலயத்தில் வழிபட்டனர்.
மேலும், தேரிவிளையில் ஒரு ஜெபவீட்டைக் கட்டி முடித்து அவர்களிடையே பணி செய்ய மரிய சவரி என்ற உபதேசியாரை நியமித்து, அவர் குடியிருக்க வீடும், மாதாமாதம் சம்பளமும் தன் கையிலிருந்தே கொடுத்துவந்தார். சுவிசேஷப் பணி செய்வதற்காக பிற இடங்களுக்கு உபதேசியார், குருமார் மற்றும் மிஷனரிகளை அனுப்பும் பழக்கத்தை தொடங்கியவர் கிளாரிந்த அம்மையாரே. பாளையங்கோட்டை திருச்சபை ஆலமரத்தைப் போல பரந்து விரிந்திருந்தது. அனைவராலும் 'இராச கிளாரிந்தா' என்று அன்புடன் அழைக்கப்பட்ட இவரது இறுதிநாட்களில் சபையின் பொறுப்பாளர்கள் அவரை அதிகமாகப் பொருட்படுத்தவில்லை. தனது 60-வது வயதில் 1806-ம் ஆண்டு மறுமையில் பிரவேசித்தார் கிளாரிந்தா அம்மையார். அவர் செய்த பணியோ வரலாற்றுப் பதிவாகி நம் மண்ணிலே நிலைத்திருக்கிறது.
Comments
Post a Comment