பேராயர் வேதநாயகம் சாமுவேல் அசரியா
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வெள்ளாளன்விளையைச் சேர்ந்தவர் வேலாயுதம் என்ற தாமஸ் வேதநாயகம், 1839-ம் ஆண்டு இயேசுவை ஏற்றுக்கொண்ட இவர், தனது மகனுக்கு வேதநாயகம் சாமுவேல் அசரியா எனப் பெயரிட்டார். 17.08.1874 அன்று பிறந்தார் பேராயர் அசரியா, 1889-ம் ஆண்டு தனது சிறுவயதிலேயே தந்தையை இழந்ததால், தாயின் பராமரிப்பில் வளர்க்கப்பட்டவர். நல்லதோர் ஜெப வீரனாகவும், வேதத்தை நன்கு கற்றறிந்த வாலிபனாகவும் வளர்ந்து வந்த இவர், சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் இறையியல் பட்டமும் பெற்றார். பின்னர் 'கிறிஸ்தவ வாலிப சங்கத்தின் (YMCA) காரியதரிசியாக நியமிக்கப்பட்டார். அந்நாட்களில், மிஷனரியாகப் பணிசெய்துகொண்டிருந்த உவாக்கர் ஐயரது ஊழியத்தினாலும், செய்தியினாலும் தேவனுக்காக ஊழியம் செய்ய அதிகமாக ஊக்குவிக்கப்பட்டார். 1902 -ம் ஆண்டு யாழ்ப்பாணம் சென்றபோது, அங்கு தமிழர்கள் தொடங்கிய மிஷனரி சங்கத்தின்மூலம் நடைபெற்றுவந்த செயல்பாடுகளினால் மிகவும் ஈர்க்கப்பட்டு, இந்தியாவிலும் மிஷனரி சங்கம் ஒன்றைத் தொடங்க முடிவு செய்தார்.
மிஷனரி மாநாடு ஒன்றில் இவர் பிரசங்கித்துக்கொண்டிருந்தபோது, ஜனங்கள் ஆர்வமுடன் இறைவார்த்தையினைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். இறைப்பணியின் தேவையையும், அவசியத்தையும் அனைவரின் உள்ளத்திலும் ஊற்றிக்கொண்டிருந்தார் போதகர் அசரியா. 'மிஷனரிப் பணிக்காக அர்ப்பணிப்போர் உங்களில் எத்தனை பேர்?' என்ற அறைகூவலை அவர் விடுத்தபோது, கூட்டத்திலிருந்து எழுந்து வந்த வாலிபன் ஒருவன் போதகர் அசரியாவை நோக்கி, 'நீங்களே ஏன் ஒரு மிஷனரியாகச் செல்லக்கூடாது?' என்ற கேள்வியை முன்வைத்தான். வாலிபனின் கேள்வியால் உள்ளம் உடைந்த அசரியா மிஷனரிப் பணிக்காக அன்றே தன்னை ஒப்புக்கொடுத்தார். 1903 -ம் ஆண்டு சில நண்பர்களுடன் இணைந்து திருநெல்வேலி இந்திய மிஷனரி சங்கத்தைத் தொடங்கினார் (IMS).
போதகர் அசரியாவின் ஊழியத்தில் காணப்பட்ட நேர்மை, உண்மை, தைரியத்தைக் கண்ட சென்னை பேராயர் ஒயிட் ஹெட், தோர்ணக்கல்லில் மிஷனரியாகச் செல்வதற்கு முன் உதவியும் மற்றும் போதகர் அபிஷேகம் கொடுத்து அனுப்பினார். YMCA வின் பணிகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, தோர்ணக்கல் பணித்தளத்தில் தனது பணியினைத் தொடர்ந்தார் போதகர் அசரியா. ஆறு மாதத்திற்குள் அசரியாவுக்கு குரு பட்டம் கொடுக்கப்பட்டது. சில ஆண்டுகளில் பல தடைகளையும் தாண்டி, கல்கத்தா செயிண்ட் பவுல் தேவாலயத்தில் பேராயராக அசரியாவை அபிஷேகம் செய்து வைத்தார் பேராயர் ஒயிட்ஹெட். தோர்ணக்கல்லின் பேராயராகவும், சென்னை பேராயத்தின் உதவி பேராயராகவும் திறம்பட செயல்பட்டார் பேராயர் அசரியா.
தோர்ணக்கல்லின் மிஷனரி பிஷப்பாக சில வருடங்களில் அநேக ஆத்துமாக்களை இரட்சிப்புக்குள் நடத்தினார். 1944 -ம் ஆண்டு 2,40,000 ஆத்துமாக்களையும், 2152 தென்னிந்தியத் திருச்சபைகளையும், இந்திய குருமார் 167 மற்றும் சபை ஊழியர்கள் 1874 ஆக கொண்டதாக தோர்ணக்கல்லில் தென்னிந்தியத் திருச்சபையின் பேராயம் வளர்ந்து நின்றது. பிஷப் அசரியா அவர்களினால் தோர்ணக்கல்லில் கட்டப்பட்ட திருச்சபையானது முற்றிலும் இந்தியர்களின் பணத்தினால், இந்திய பாரம்பரிய கட்டடங்களின் வடிவில் கட்டப்பட்டு இன்று வரை அதன் பொழிவு மாறாமல் உள்ளது. பிஷப் அசரியா கட்டின ஆலயத்தில் அப்போது தரையில் தான் அமரவேணடும். தெலுங்கு மொழியினை தான் கற்றுக்கொண்டதுடன், கீர்த்தனைகள், மற்றும் ஆராதனை முறைமைகளில் சில மாற்றங்களை தெலுங்கில் செய்து பின்பற்ற உதவினார்.
தென்னிந்தியத் திருச்சபை உருவாவதற்க்கு வித்திட்டவர் பேராயர் அசரியா அவர்களே. 1944 -ம் ஆண்டு டிசம்பர் 31 அன்று மிஷனரியாக தன்னை அர்ப்பணித்து, அத்துடன் முதல் இந்திய பேராயராகவும் சிறப்பாக தேவ ஊழியம் செய்த பேராயர் அசரியா ஜனவரி 1, 1945 - ல் கர்த்தருடைய இளைப்பாறுதலில் பிரவேசித்தார்.'இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும்' (ஏசா 6:8) என்று அர்ப்பணித்த பிஷப் அசரியாவின் வரிசையில் அடுத்ததாக நின்றுகொண்டிருக்கிறோம் நாம்.
தோர்ணக்கல்லில் பேராயர் அசரியாவால் கட்டப்பட்ட ஆலயம்
கருத்துகள்
கருத்துரையிடுக